காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு – இம்ரான் கான்

இலங்கைக்கு முதல் முறையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் பாகிஸ்தான்- இலங்கை இடையேயான உறவை வலுவாக்குவது குறித்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் இந்தியாவுடனான உறவு குறித்து இம்ரான்கான் பேசினார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறும்போது, “காஷ்மீரில் காஷ்மீர் மட்டுமே எங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை. காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம். நான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றவுடன் இந்தியப் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு பிராந்திய பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம் என்று கூறினேன்.
எனினும், இதில் நான் வெற்றி பெறவில்லை. ஆனால், நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதுதான் வறுமையைச் சமாளிக்க ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்டபின் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் பெரிய அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. அதன்பின், இந்தியா தரப்பிலும் பதிலடி தரப்பட்டு, பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் வலுத்து வந்தது. இருப்பினும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயார் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.