ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு சொந்த வீடு
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ‘நவரத்தினங்கள்’ எனும் 9 முக்கியத் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார். அதில், ஏழைகளுக்கு வீடு, இலவசமருத்துவம், கல்வி, விவசாயக் கடன், வேலை வாய்ப்பு, பூரண மது விலக்கு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
இதையடுத்து, தான் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதிகளில் உள்ள ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்தி வருகிறார். இதில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்கள் பெயரிலேயே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது.
விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் பட்டா வழங்குமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால், ஏழைகள் அனைவரும் இலவச பட்டாக்களை பெற்று வருகின்றனர்.
இது தவிர, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம், தள்ளு வண்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் என அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், நகர்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலம் அரசு இலவச வீடுகளை கட்டித்தருவது என்றும், அதில் 300 சதுர அடிக்குள் இருக்கும் வீடுகளை ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.