மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; பள்ளிகள் மூடல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்துள்ளது. ஆனால், சில மாவட்டங்களில் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். கேரளாவில் கடந்த 4 வாரங்களாக, கோவிட் பாதிப்பு சராசரி குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருந்தது. மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18,200-லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புனே மாவட்டத்தில் நேற்றுபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டது. ”வரும் 28-ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். வைரஸ் பரவலை பொறுத்துஅடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், “அமராவதி மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இந்த 7 நாட்களும் அத்தியாவசிய கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயல்படும்” என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாக்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ராவத் கூறுகையில் ‘‘கரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாக்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மார்ச் 7-ம் தேதி வரை மூடப்படுகின்றன.
மேலும், “வார இறுதி நாட்களில் சந்தைகள் மூட்பபடுகின்றன. ஓட்டல்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள் 50 சதவீத நபர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். மக்கள் இந்த உத்தரவை கடுமையாக கடை பிடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.