பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றும் புதிதல்ல… – சட்டப்பேரவையில் கொந்தளித்த நாராயணசாமி!
பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு புதிதல்ல. ஏற்கெனவே கோவா, மத்தியப் பிரதேசம் என உதாரணங்கள் உள்ளன. தற்போது புதுச்சேரியிலும் அதை நிகழ்த்தியிருக்கிறார்கள் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனால், துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சோனியா காந்தி, ஸ்டாலின் ஆதரவால் நான் முதல்வரானேன். நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் மக்கள் எனக்கு அளித்தனர்.
அதன் பின்னர் புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார். அவருடைய பதவியேற்புக்குப் பின் ஆட்சிக்கு அன்றாடம் தொல்லை ஏற்பட்டது. கிரண்பேடி மூலம் அரசுக்கு மத்திய பாஜக தடைகளை ஏற்படுத்தியது. புதுச்சேரி எதிர்க்கட்சிகளும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் கொடுத்த மாநிலம் என்ற பெருமையை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களுக்காகச் சேவை ஆற்றினர். கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசு மாநிலங்களுக்கு 41% நிதி தருகிறது. ஆனால், புதுச்சேரி பிரதேசத்துக்கு 20% நிதிதான் கிடைத்தது. மோடி அரசு புதுச்சேரி அரசைத் தொடர்ந்து புறக்கணிக்கிறது
இக்கட்டான காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி போடக் கோப்பு அனுப்பிய நிலையில், அது ஆளுநர் மாளிகையில் தூங்குகிறது. கோப்பு காலதாமதம். அதனால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தினார்கள்.
ஆளுநர், தலைமைச் செயலர், டிஜிபி நியமனங்கள் பற்றி மாநில அரசிடம் ஆலோசிக்கப்படவில்லை. இது, ஜனநாயக நாடு. பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாமா?
புதுச்சேரியை மழைக் காலங்களில் ஆய்வு செய்தேன். ஆனால், அதையும் திட்டமிட்டுக் களங்கம் செய்தனர். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100 ஆக்கியதுதான் பாஜகவின் சாதனை. இந்தியாவை அடமானம் வைக்கிறது மத்திய அரசு. எப்பதவியும் நிரந்தரம் இல்லை. சிவலோகப் பதவி மட்டுமே நிரந்தரம்.
பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு புதிதல்ல. ஏற்கெனவே கோவா, மத்தியப் பிரதேசம் என உதாரணங்கள் உள்ளன. தற்போது புதுச்சேரியில் அதை நிகழ்த்தத் துடிக்கிறது. அரசைக் கலைப்பது ஜனநாயகப் படுகொலை. மக்கள் முடிவு செய்வார்கள். வாய்மையே வெல்லும்” என்று பேசினார்.
தொடர்ந்து காங்கிரஸ், திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டனி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததாக அறிவித்தார்.