சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்கிறது மோடி அரசு – ராகுல் காந்தி
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு, நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தின. இதனால் நாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது.
குறிப்பாக, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.22 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல மத்தியப் பிரதேச மாநிலம், அணுப்பூரில் பெட்ரோல் விலை ரூ.100.98 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலையும் ரூ.93.23 ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும், சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பெட்ரோல் நிலையங்களில் உங்கள் காருக்கு எரிபொருள் நிரப்பும்போது, அங்குள்ள மீட்டர் வேகமாக ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரவில்லை. வீழ்ச்சி அடைந்து வருகிறது.
ஆனால், பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஆக இங்கு அதிகரித்துள்ளது. சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.