குஜராத்தில் உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையை அமைக்கவுள்ளார் அம்பானி!

ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது அடுத்த திட்டமாக, உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பெட்ரோலியம், தகவல் தொடர்பு துறைகளுடன் தகவல் தொழில்நுட்பம், இ-காமர்ஸ் என பல துறைகளிலும் தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்.

அதோடு, மும்பை இந்தியன்ஸ், கால்பந்து லீக் அணியையும் சொந்தமாக வைத்துள்ளார். சுமார் 6 லட்சம் கோடிக்கு அதிபதியான அம்பானி அடுத்ததாக தடம் பதிக்க இருப்பது மிருகக்காட்சி சாலை பிசினஸ். குஜராத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 280 ஏக்கர் பரப்பளவிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதன் அருகே பிரமாண்டமான மிருகக்காட்சி சாலையை உருவாக்கி வருகிறார்.

இது, உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாக திகழும். இங்கு கொமோடா உடும்பு, புலிகள், சிறுத்தைகள், பறவைகள் என 100க்கும் மேற்பட்ட உயிரினங்களை பராமரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த மிருகக்காட்சி 2023ல் திறக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவன கார்ப்பரேட் விவகார இயக்குநர் பரிமல் நத்வானி கூறி உள்ளார். எவ்வளவு செலவில் ஜூ அமைய உள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அதை கேட்டால், ரகசியம் என்கிறார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *