வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்கட்சிகள் பொய்ப்பிரசாரம் – பிரதமர் குற்றச்சாட்டு
உத்தரபிரதேச மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சிகள் மீது குற்றச்சாட்டியுள்ளார்.
அதில், அவர் ”நாட்டில் உள்ள சிறிய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. நீண்டகாலமாக தங்கள் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த புதிய சட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
ஆனால், விவசாயிகளின் நலனுக்காகத் தங்கள் ஆட்சிக்காலங்களில் எதுவும் செய்யாத எதிர்க்கட்சிகள், இன்று இந்த சட்டங்கள் குறித்து பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேளாண் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் கால்பதிக்க நடவடிக்கை எடுத்த கட்சிகள் எல்லாம், இன்று உள்நாட்டு நிறுவனங்களைக் காண்பித்து விவசாயிகளைப் பயமுறுத்துகின்றன.
தற்போது, இந்த விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தும் அக்கட்சிகளை விவசாயிகள் அடையாளம் கண்டு விட்டார்கள். புதிய வேளாண் சட்டங்களில் இருக்கும் நன்மைகளை விவசாயிகள் உணரத் தொடங்கி விட்டனர். இனி எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் விவசாயிகளிடம் எடுபடாது” என்று கூறியுள்ளார்.