தலையில் பூச்சூடி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்!
மியான்மர் நாட்டில் ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சியை நீக்கி விட்டு அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களையும் கைது செய்துள்ளது.
இதனை எதிர்த்து, அந்நாட்டு மக்கள் அனைவரும் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் ராணுவம் அத்து மீறி வருகிறது.
இதற்கு ஐ.நா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆங் சான் சூச்சி நேற்று(21.6.2021) தனது 76 ஆவது பிறந்த நாள். இதனையடுத்து, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அவர் எப்போதும் தலையில் பூ வைத்துக் கொண்டிருப்பார். அதனைக் குறிக்கும் விதமாக நேற்று மக்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஆங் சான் சூச்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த படி போராட்டம் நடத்தினர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “ஆங் சான் சூச்சி மற்றும் எங்கள் நாட்டு மக்களுக்கு விடுதலை வேண்டும்.
தனிநபர் சுதந்திரமும் சமூக சுதந்திரமும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இதனை உணர்த்துவதற்காக தான் இந்த பூச்சூடும் போராட்டம் நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.