வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் எண்ணெய் நிறுவனங்கள்…முதலமைச்சருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம்‌ வடத்தெரு பகுதியில்‌ ஹைட்ரோகார்பன்‌ எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை மத்திய பெட்ரோலியம்‌ மற்றும்‌ எரிவாயு அமைச்சகம்‌ திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌, கடலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ மாவட்டங்களில்‌ புதிதாக 15 கிணறுகளை அமைக்க எண்ணெய்‌ மற்றும்‌ எரிவாயு ஆணையத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும்‌, இதுபோன்ற திட்டங்கள்‌ தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்திற்குட்பட்ட ஹைட்ரோகார்பன்‌, மீத்தேன்‌ போன்ற திட்டங்கள்‌ தங்களின்‌ வாழ்வாதாரத்தை பாதிக்கும்‌ என்ற அச்சத்தில்‌, அதற்கு எதிராக காவேரி டெல்டா பகுதியில்‌ உள்ள விவசாயிகள்‌, விவசாயத்‌ தொழிலாளர்கள்‌, மீனவர்கள்‌ உள்ளிட்ட அனைத்துத்‌ தரப்பினரும்‌ தொடர்‌ போராட்டங்களை நடத்தி வருகின்றனர்‌.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, 2020 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண்‌ மண்டல மேம்படுத்துதல்‌ சட்டத்தில்‌ உள்ள பிரிவுகளை மீறும்‌ வகையில்‌, காவேரி வடிநிலப்‌ பகுதியில்‌ அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம்‌, வடத்தெரு பகுதியில்‌ ஹைட்ரோகார்பன்‌ எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை மத்திய பெட்ரோலியம்‌ மற்றும்‌ இயற்கை எரிவாயு அமைச்சகம்‌ 10-6-2021 அன்று வெளியிட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்‌ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்புமிகு இந்தியப்‌ பிரதமருக்கு கடிதம்‌ எழுதியுள்ளார்கள்‌.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14-06-2021 அன்று நான்‌ விரிவான அறிக்கை வெளியிட்டதோடு, ஏல அறிவிப்பினை மத்திய பெட்ரோலியம்‌ மற்றும்‌ எரிவாயு அமைச்சகம்‌ உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்‌, இதனை மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களிடத்தில்‌ நேரடியாக வலியுறுத்த வேண்டும்‌ என்றும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்‌ விடுத்திருந்தேன்‌. இதனை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம்‌, வடத்தெரு: பகுதியில்‌ போராட்டங்கள்‌ நடைபெற்றன. அந்தப்‌ போராட்டங்களில்‌ தங்களுடைய நிலங்களை தரமுடியாது என்பதை விவசாயிகள்‌ தெளிவுபடுத்திவிட்டனர்‌.

இந்தப்‌ பிரச்சனை தீர்வதற்குள்‌, எண்ணெய்‌ மற்றும்‌ எரிவாயு ஆணையம்‌, ஹைட்ரோகார்பன்‌ இருக்கிறதா என்பது குறித்து ஆராய கடலூர் மாவட்டத்தில்‌ ஐந்து கிணறுகள்‌, அரியலூர்‌ மாவட்டத்தில்‌ பத்து கிணறுகள்‌, ஆக மொத்தம்‌ 15 கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல்‌ அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல்‌ தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம்‌ 15-6-2021 தேதியிட்ட கடிதம்‌ மூலம்‌ கோரியுள்ளது.

எண்ணெய்‌ மற்றும்‌ எரிவாயு ஆணையத்தின்‌ இந்தச்‌ செயல்‌ வெந்த புண்ணில்‌ வேல்‌ பாய்ச்சுவது போல்‌ அமைந்துள்ளது. காவேரி டெல்டா மற்றும்‌ அதனைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ நடைபெறும்‌ வேளாண்‌ பணிகள்‌ தான்‌ தமிழ்நாட்டின்‌ உணவுப்‌ பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றன. வேளாண்‌ பணிகள்‌ அல்லாத ஹைட்ரோகார்பன்‌, மீத்தேன்‌ போன்ற திட்டங்கள்‌ விவசாயத்தை பாதித்து, உணவுப்‌ பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்‌ விளைவிப்பதோடு மட்டுமல்லாமல்‌, செழிப்பான நிலங்களை நிரந்தரமாக அழித்து, நிலத்தடி நீரை பயனற்றதாக்குகிறது.

இது நிர, வேளாண்‌ இல்லாத பிற திட்டங்கள்‌ வேளாண்‌ தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஊரக விவசாயிகளின்‌ உணர்ச்சிகளை புண்படுத்தும்‌ விதமாக அமைந்துள்ள. வேளாண்‌ தொழிலையும்‌, விவசாயப்‌ பெருமக்களின்‌ வாழ்வாதாரத்தையும்‌ பாதுகாக்கும்‌ வகையில்‌, டெல்டா பகுதி மற்றும்‌ அதனைச்‌ சுற்றியுள்ள மாவட்டங்களில்‌: வேளாண்‌ அல்லாத பிற பணிகள்‌ நடைபெறக்கூடாது என்பதில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசியல்‌ கட்சிகளும்‌, விவசாயிகள்‌ உள்ளிட்ட அனைத்துத்‌ தரப்பினரும்‌ உறுதியாக உள்ளனர்‌.

எனவே, தமிழ்நாட்டு மக்களின்‌ உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்‌ வகையில்‌, புதுக்கோட்டை மாவட்டம்‌ வடத்தெரு பகுதியில்‌ ஹைட்ரோகார்பன்‌ எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை மத்திய பெட்ரோலியம்‌ மற்றும்‌ எரிவாயு அமைச்சகம்‌ திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌, கடலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ மாவட்டங்களில்‌ புதிதாக 15 கிணறுகளை அமைக்க எண்ணெய்‌ மற்றும்‌ எரிவாயு ஆணையத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும்‌, இதுபோன்ற திட்டங்கள்‌ தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களை தமிழ்நாட்டு மக்கள்‌ சார்பாக கேட்டுக்‌ கொள்கிறேன்‌’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *