சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநருக்கு அழைப்பு விடுத்த அப்பாவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார்.

இதனையடுத்து, பேரவைத் தலைவராக அப்பாவு, பேரவைத் துணைத் தலைவராக கு. பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், கொரோனா பரவல் காரணமாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், பாதுகாப்புக்காக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் இன்று காலை சந்தித்து பேரவைத் தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவைத் தலைவர் அப்பாவு, ‘சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுப்பது மரபு. அதன்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் கண்டிப்பாக வருவதாகக் கூறியிருக்கிறார்.

கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பில்லாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும்.கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *