தடுப்பூசியும், உடல் வெப்பநிலையும் முக்கியம் – சத்ய பிரதா சாகு
தமிழகத்தில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தற்போது, கொரோனா பரவலும் அதிகமாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவோருக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கொரோனா பரவல் அதிகமானதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்கு எண்ணிக்கையின் போது, மேசைகளின் எண்ணிக்கையில் 14 முதல் 30 மேசைகள் இருக்கும் சில இடங்களில் மாற்றம் இருக்கலாம். பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. சில இடங்களில் மட்டுமே மாற்றம் இருக்கலாம்.
வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை உள்ளது. அன்று முழு ஊரடங்கு குறித்து அரசுதான் முடிவெடுக்கும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்டவை இருக்கும்.
தற்போது வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கரோனா பரிசோதனை செய்து தொற்றில்லை என்கிற சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இவை இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் அங்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பார்கள். உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.