தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில், நேற்று அனைத்து தொகுதிகளும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கார்த்திகேய சிவசேனாபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பின், அவரை வாக்குச்சாவடியை விட்டு வெளியே வராத படி, அறைக்குள் வைத்து அதிமுகவினர் பூட்டிவிட்டனர். சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேய சிவசேனாபதியை மீட்டு காரில் அனுப்பி வைத்தார். அப்போதும், அதிமுக மற்றும் பாஜகவினர் சிவசேனாபதி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்து, கார்த்திகேய சிவசேனாபதி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில, குனியமுத்தூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் அமைச்சர் வேலுமணி தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கட்சி கொடியுடன் காரில், அதிமுக துண்டு அணிந்து சென்றார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் தொண்டாமுத்தூர் தொகுதி மண்டல அலுவலர் ராஜா முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எஸ்.பி. வேலிமணி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.