தனது எளிமையால் மக்களை கவர்ந்து வரும் திருத்துறைப்பூண்டி வேட்பாளர்!

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த க.மாரிமுத்துவின் எளிமையான வாழ்க்கை இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் மிகவும்  குறைந்த சொத்து மதிப்பு உடையவர் க.மாரிமுத்து. திருத்துறைப்பூண்டியில் இருந்து 15கி.மீ தொலைவில் இருக்கின்ற காடுவாகுடி கிராமத்தில் வசித்து வருகிறார். சாதாரண விவசாயியான க. மாரிமுத்து தனது குடிசை வீட்டில் தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது 66 செண்ட் நிலத்தில் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தைகளை படிக்க வைக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர், கோட்டூர் ஒன்றிய இளைஞர் பெருமன்ற செயலாளர், ஒன்றியத் துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதி பல்வேறு பொறுப்புகளின் பணியாற்றி வந்தார். கம்யூனிசவாதிகளுக்கே உரிய இயல்புடன் எளிமையாக வாழ்ந்து வரும் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் எல்லோராலும் அறியப்பட்டு வருகிறார்.

எளிமை, நேர்மை போன்ற பண்புகளால் அறியப்படும் திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் க.மாரிமுத்து, மக்களை சந்திப்பதிலும் தனது அதே எளிமையை தொடர்கிறார். இதனால் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் கடும் போட்டியாளராக மாறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *