வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடு செய்யலாம் என வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி முறைகேடு செய்யலாம் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் கூறியதாக வெளியான வதந்தி தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலா வந்துகொண்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தவறான தகவல் குறித்து டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் திட்டவட்டமாக மறுத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்ற செய்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வதந்தி பரப்பிய 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.