திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று காலை 10 மணி அளவில் கையெழுத்தாகிறது!

தி.மு.க. – காங்கிரஸ் இடையிலான தொகுதிகள் பங்கீடு ஒப்பந்தம் இன்று காலை 10 மணியளவில் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து வந்தது. தி.மு.க. தனது தோழமைக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே கொடுக்க முன்வந்ததால், இந்த இழுபறி நீடித்தது.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று மாலையில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
இதற்குப் பிறகு காங்கிரசுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்துவந்தன. முடிவில், சனிக்கிழமையன்று இரவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு காங்கிரசிற்கான இடங்கள் இறுதிசெய்யப்பட்டு, பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், “இன்று நான், கே.எஸ். அழகிரி, ராமசாமி ஆகியோர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். இரு கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நாளை காலை கையெழுத்தாகும். மற்ற விவரங்கள் அப்போது அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்படலாம்.
இதுவரை தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவற்றுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 2011ஆம் ஆண்டில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் ஐந்து இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 2006ஆம் ஆண்டில் 50 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 34 இடங்களைப் பெற்றது. 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்து 46 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களைக் கைப்பற்றின.
2006ஆம் ஆண்டிலிருந்து சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் இணைந்தே போட்டியிட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 இடங்களில் தி.மு.க. இதுவரை 48 இடங்களைப் பகிர்ந்தளித்துள்ளது. இன்னும் சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி இறுதிசெய்யப்பட வேண்டியுள்ளது.