அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் 56 பேர் அதிரடி பணிநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம். போதுமான கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக கூறி பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பழம்பெரும் பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நேரடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏற்றது. அப்போது பல்வேறு காலகட்டங்களில் அதாவது 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்த 56 பேர் போதுமான கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் விசாரண நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் போதிய அடிப்படை கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக 56 பேரையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சிங்காரவேல்,

10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை போன்ற பாடப்பிரிவுகளை முறையாக படிக்காமல் இருந்ததாகவும், உதவி பேராசிரியராக சேரும்போது உதவி பேராசிரியருக்கான போதுமான கல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாகவும் 56 பேர் கண்டறியப்பட்டனர். இவர்கள் மீது ஆட்சி மன்ற குழு முடிவின்படியும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் அறிவுறுத்தலின்படியும் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கு உத்தரவுகளை அந்தந்த துறை தலைவர்கள் மூலம் வழங்க சொல்லி விட்டதாகவும், அயற்பணியாக வெளிக் கல்லூரிகளில் சென்று பணியாற்றி வரும் 38 உதவி பேராசிரியர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி விட்டதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிங்காரவேல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *