விஜயதசமியை முன்னிட்டு கல்வி பயணத்தை தொடங்கிய மழலையர்கள்..!

விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக சேர்ந்த மழலையர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் போடப்பட்டிருந்த நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தான அ வை எழுதியும் திருக்குறள் கூறியும்  தங்களது கல்வி பயணத்தை தொடங்கினர்,

பள்ளிக்கு வந்த புதிய மாணவர்களை ஆசிரியர்கள் திலகமிட்டும் மாலை அணிவித்தும் அச்சதை தூவியும் திருக்குறள் புத்தகமும் பெற்றோர்களுக்கு சால்வை கொடுத்தும் உற்சாகமாக வரவேற்ற நிலையில் சில குழந்தைகளின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு பழத்தட்டுகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

விஜயதசமியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி குழந்தைகள் தமிழில் முதல் எழுத்தான அ வை நெல்மணிகளில் எழுதும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியும் பல்வேறு கோயில்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா என்ற தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர வருகை தந்த மழலையர்களை பள்ளி ஆசிரியர்கள் திலகமிட்டும் மாலை அணிவித்தும் அச்சதை தூவியும் பெற்றோர்களுக்கு சால்வை கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். 

மேலும் சில குழந்தைகளின் குடும்பத்தில் உள்ள தாய் தந்தை தாத்தா பாட்டி தாய்மாமன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு பழத்தட்டுகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் மழலையர்களின் சான்றிதழ்களை சரஸ்வதி பாதத்தில் வைத்து பூஜை செய்து பின்னர் அவர்களுக்கு தேவையான புத்தகப்பை புத்தகம் எழுது பொருட்கள் திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. 

பின்னர் புதிதாக கல்வி பயில சேர்ந்த மழலையர்களை அவர்களது பெற்றோர்கள் கைப்பிடித்து வாழை இலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தான அ எழுதியும் திருக்குறள் கூறியும் அவர்களது கல்வி பயணத்தை பாரம்பரிய முறைப்படி மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தனர்.

மேலும் விஜயதசமயில் விஜயம் என்பது வெற்றி என்றும் அன்றைய தினம் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி அடையும் அதேபோல் வாழை இலை என்பது வாழையடி வாழையாக வளரக்கூடியது அதனால் வாழை இலையில் தமிழர்களின் அடையாளமாகவும் பாரம்பரியமாகவும் உள்ள நெல்மணிகளை கொட்டி அதில் தமிழின் முதல் எழுத்தான அ னாவை முதலில் கல்வி தொடங்க உள்ள மழலையர்களை எழுத வைத்து அவர்கள் கல்வி வாழையடி வாழையாக வளர வேண்டும் என்று அச்சதை தூவி ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்தியுள்ளதாகவும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *