ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள்! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அண்மையில், சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின் போது, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது பாலியல் புகாரளிக்கப்பட்டது.

மேலும், காவல் துறையினர் நடத்திய விசாரனையில், அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆன்லைன் வகுப்புகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை நடத்தினர்.

இதனையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய நடைமுறைகளை விதித்துள்ளார். முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார் .

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் , சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் , மற்ற பள்ளி , கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்குப் பின்வரும் முடிவுகளையும் , உத்தரவுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார் .

இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்தப் பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் . இப்பதிவினைச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும் .

இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆணையர் , கல்லூரிக் கல்வி இயக்குநர் , கணினி குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள் , கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் .

அக்குழு , மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தினார் .

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , மாணவ , மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு ‘ ஹெல்ப்லைன் ‘ எண் உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *