சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு

இந்தியாவில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்பு மாணவ மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

டெல்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்க விடுத்திருந்தார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.

இதனிடையே, இன்று கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு தலைவர்களின் கோரிக்கையை அடுத்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். ஒருவேளை சூழல் தேர்வு நடத்த ஏதுவாக இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாக, தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *