இட ஒதுக்கீடு விழுக்காட்டில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காலம் தாழ்த்தாமல் அறிவிக்க வேண்டும் – கி.வீரமணி
மகாராஷ்டிர மாநிலத்தில் 2018-ல் மராத்தா ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டையும் தாண்டி அளிக்கப்படுவது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்தினை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. அதற்கு ஒரு வாரம் அவகாசமும் அளிக்கப்பட்டது.
அதற்கான அவகாசம் நாளையோடு (திங்கள் 22.3.2021) முடிவடையும் நிலையில், தமிழ்நாடு அரசு தன் கருத்தினை உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்து விட்டதா?தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது – இது மிகவும் முக்கியமான கருத்து அல்லவா!50 விழுக்காட்டைத் தாண்டி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று தெலங்கானா மாநிலம் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு இதில் அலட்சியம் காட்டக்கூடாது – உரிய காலக் கெடுவுக்குள் உடனடியாக சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.