தந்தையை கொன்றவரை பழிதீர்த்த மகன் போலீசில் சரண்
செங்குன்றம் அருகே 22ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொன்றவரை வெட்டி கொலை செய்து பழிதீர்த்த மகன். சிறை தண்டனை அனுபவித்து விடுதலையானவரை கொன்றுவிட்டு போலீசில் சரண்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் செய்யா என்கிற செழியன் (59). கடந்த 2001ஆம் ஆண்டு பிரபாகரன் என்பவரையும், அவரது பாபு ஆகிய இருவரையும் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர். சுமார் 19ஆண்டுகள் தண்டனை அனுபவித்து 3ஆண்டுகளுக்கு முன் புழல் சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு வழக்கம் போல பணி முடித்து வீடு திரும்பிய செழியனை மர்ம கும்பல் வழி மறித்து சரமாரியாக வெட்டி தப்பி சென்றது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செழியனை மீட்ட காவல்துறையினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செழியன் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே செழியனை கொன்றதாக சதீஷ்குமார், அப்பு, விஷால், மகேஷ் ஆகிய 4பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
தந்தை பிரபாகரனை 2001ஆம் ஆண்டு கொலை செய்ததால் பழிக்கு பழியாக செழியனை கொன்றதாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 22ஆண்டுகளுக்கு முன் தந்தையை கொலை செய்தவரை மகன் பழி தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.