மகளுக்கு பாலியல் தொந்தரவு; தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் சிறை
பெற்ற மகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சோலைராஜ் என்பவர் அவரது 13 வயது மகளை பாலியல் ரீதியான தொந்தரவு செய்து பல முறை துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவத்தை சிறுமி தாயிடம் தெரிவித்த நிலையில், தாய் கணவரான சோலை ராஜிடம் பெற்ற மகளையே இப்படி செய்யலாமா என சண்டையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சோலைராஜ் நடந்த சம்பவங்களை வெளியில் தெரிவித்தால் சிறுமியையும் தாயையும் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தேனி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோலை ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
எனவே சோலைராஜ் பெற்ற மகளையே பாலியல் ரீதியான தொந்தரவு செய்து துன்புறுத்தியும், அதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் சாட்சியங்களின் அடிப்படையில் சோலைராஜ் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளி சோலைராஜுக்கு போக்சோ சட்டம் பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 5000 ரூபாய் அபராதமும், போக்ஷோ சட்டம் பிரிவு 10ன் கீழ் மேலும் ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளி சோலை ராஜ் மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.