அசோக முத்திரையை தவறாக பயன்படுத்தி ஒன்றிய அரசின் லோன் தருவதாக மோசடி..!

இந்திய அரசின் அசோக முத்திரையை தவறாக பயன்படுத்தி, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு கடனுதவி பெற்று தருவதாக கூறிய மோசடி புகாரில்  கைதான இரண்டு  பேரையும் காவலில் எடுத்த போலீசார் இன்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் ஒரிசா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடன் உதவி பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பாஜக பிரமுகரும் நடிகையுமான நமீதாவின் கணவருக்கு தொடர்பு உள்ளதா?  என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை.

சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பின் பெயரில் MSME ப்ரோமோஷன் கவுன்சில் என்ற  அமைப்பின் பேரில் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவன உரிமையாளர்களுடான கலந்துரையாடல் கூட்டம்  நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், அமைப்பின் தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யன் யாதவ், மற்றும் தமிழகத்தின் தலைவரான பாஜக பிரமுகரும் நடிகையுமான நமிதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களிடம் மத்திய அரசின் கடன் விவரம்  குறித்து பேசினர். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக நமீதாவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கூட்டத்தின் பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும்  கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்திய அரசின் அரசு முத்திரையை தவறாக  பயன்படுத்தி இருந்ததோடு,  தேசிய கொடியை வாகனத்தில் பொறுத்திருந்தது  குறித்து புகார் எழுந்தது.  இதுகுறித்து கோபால் என்பவர்,  இந்திய அரசின் முத்திரையை தவறாக பயன்படுத்தியது குறித்து சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில்  அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் தேசிய செயலாளர் துஷ்யந் யாதவ் ஆகிய  இருவர் மீதும்  வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த அமைப்பின் தலைவர் முத்துராமன் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவரும் ,  செயலாளரும்  பல்லிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி  செய்திருப்பதாக புகார் எழுந்தது.  இதனால்  இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து,  கடந்த ஆறாம் தேதி,  இருவரையும் போலீஸ் காவலில் எடுத்த சூரமங்கலம் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து 48 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு பல்வேறு வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

இதில் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கான கடன் உதவி பெற்று தருவது, முதலீடுகளை ஈட்டுவது போன்றவற்றிற்காக  தமிழகம் மட்டுமல்லாமல் ஒரிசா, கேரளா உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில் இது போன்ற கூட்டங்களை நடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலும் இந்த அமைப்பில் பல்வேறு பொறுப்புகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக விசாரணையில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து இரண்டு நாள் போலீஸ்காவல் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை, சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரையும் காவல் துறையினர் ஆஜர் படுத்தினர். இதனைத் தொடர்ந்து முத்துராமன் மற்றும் துஷ்யன் யாதவ் ஆகிய இருவரையும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

இதனிடையே இந்த மோசடி சம்பவத்தில் பாஜக பிரமுகரும், நடிகையுமான நமீதாவின் கணவருக்கு தொடர்பு உள்ளதா?  மற்றும் இந்த கூட்டத்தில் நமீதா கலந்து கொண்டதால் அவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?  என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடி கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் யாராவது இருந்தால்,  காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *