ஜவுளி நிறுவனத்தில் பாட்னராக்குவதாக விவசாயிடம் ரூ.2கோடி மோசடி

ஜவுளி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி, விவசாயியிடம் நில ஆவணங்களை பெற்று வங்கியில் அடமானம் வைத்து ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஒருவரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவர், வேறொரு வழக்கில் சிறையில் உள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்… 

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள சரளை பகுதியை சேர்ந்த ரவி-ரங்கநாயகி தம்பதியினர். அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். 

கடந்த 2018.ம் ஆண்டில் இவர்களை அணுகிய பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார், பல்லடத்தில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும், நில ஆவணங்களை அடகு வைத்து அந்த பணத்தை தனது நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குதாரர்களாக சேர்த்து கொள்வதாகவும் கூறி உள்ளார். தொழிலில் கிடைக்கும் லாபத்தில் இருந்து வங்கி கடனை அடைப்பதுடன் நன்றாக சம்பாதிக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி உள்ளார். 

இதனை நம்பிய ரவி,ரங்கநாயகி தம்பதியினர், தங்களுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சிவக்குமார், அவரது அண்ணன் விஜயகுமார், விஜயகுமாரின் மகன் ராகுல், பல்லடத்தில் அழகுநிலையம் நடத்தி வந்த பிரவீணா மற்றும் இவர்கள் நிறுவனத்தின் மேலாளர் என அறிமுகமான தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் ஆகியோர், நில ஆவணத்தை ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்து ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். 

அதன் பிறகு ரவி-ரங்கநாயகி தம்பதியினர் பலமுறை முயற்சித்தும் சிவக்குமாரை தொடர்பு கொள்ள இயலவில்லை. அதன்பிறகு பல்லடத்திற்கு சென்று விசாரித்த போது சிவக்குமார் கூறியபடி அவர் ஜவுளி நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்பதும், தங்களை ஏமாற்றி நில ஆவணங்களை அடகு வைத்து பணத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது.

இது குறித்து ரங்கநாயகி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் மாவட்ட குற்ற பிரிவு  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிவக்குமார் மற்றும் பிரவீணா இருவரும் பல்லடம், திருப்பூர், கோவை பகுதிகளில் பலரிடம் இது போன்று மோசடி செய்திருப்பதும், இது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் எஞ்சிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த தாராபுரத்தை சேர்ந்த உதயகுமாரை, ஈரோடு குற்ற பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமாரையும் அவரது மகன் ராகுலையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *