சரக்கடிப்பதில் சண்டை… கல்லால் அடித்து இளைஞர் கொலை…!

மீஞ்சூர் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூரை சேர்ந்தவர் சாந்தகுமார் (32). இவர் வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 27ஆம் தேதி மாலை சாந்தகுமார் பட்டமந்திரியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அங்கு வந்து சாந்தகுமாரிடம் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சாந்தகுமார் பணம் கொடுக்க மறுத்ததால் விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கீழே இருந்த கல்லை எடுத்து சாந்தகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் சாந்தகுமாரின் தலை, முகம், மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து சாந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தலையில் 10தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாந்தகுமாரின் தந்தை அண்ணப்பன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற இளைஞரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து கொலை முயற்சி வழக்கில் விக்னேஷை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6நாள் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து மீஞ்சூர் காவல்துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கி கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது