போலி பத்திரம் மூலம் 1000 கோடி சொத்துக்களை அபகரித்த ஆசாமி கைது

கடந்த 6 வருடத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 215 முறைக்கு மேல் ஜான்சன்குமார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது அம்பலம் – தனிப்படை போலீசாரின் விசாரணையில் 1000 கோடிக்கு மேல் ஏமாற்றி இருக்கலாம் என தொடர் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அன்புரோசியிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் தினமும் வரும் இந்த நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி  பட்டா மாறுதலுக்காக அந்தப் பகுதியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் வாரிசு சான்றிதழ் கொடுத்துள்ளார். சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டதால் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் கிராம நிர்வாக அலுவலர் விசாரித்த போது அது போலி சான்றிதழ் என தெரியவந்ததை அடுத்து லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

லால்குடி காவல் ஆய்வாளர் பிரபு மார்டினை விசாரணை செய்த போது லால்குடி அக்ரஹாரம் வாளாடி கே.என் நகர் 1வது தெருவில் வசிக்கும் குமார் என்கிற குமாரவேல் வயது 46  என்பவரிடம் போலிச் சான்றிதழ் வாங்கியதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து லால்குடி சராக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம், லால்குடி ஆய்வாளர் பிரபு கடந்த மாதம் 4ம் தேதி வாளாடியில் உள்ள குமாரவேலுவை கைது செய்து விசாரணை செய்த குமரவேல் வீட்டை சோதனை செய்த போது 17 வகையான போலி அரசு முத்திரைகள், பத்திரங்கள், பட்டா, போலி வருவாய்த்துறை ஆவணங்கள் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி சமயபுரம் மேற்கு ரத வீதி பகுதியில் வசிப்பவர் விஜயகுமாருக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை சமயபுரம் வி.துறையூரை சேர்ந்த இளையராஜா, பாரதியார் நகரை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, நங்கவரத்தை  ஜான்சன்குமார் லால்குடி அருகே சாத்தம்பாடி பகுதியில் சேர்ந்த ஒரு ரகு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் ராமு ஆகிய ஐந்து பேரும் விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டை போலியாக பத்திரம் தயாரித்து மூன்று மாதத்திற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் சான்றிதழை பெற்று கடந்த மாதம் 5ம் தேதி மண்ணச்சநல்லூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் இளையராஜாவின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளரை அணுகி உள்ளனர்.

சார்பதிவாளர் ஆவணங்களில் சந்தேகமாக இருப்பது கருதி உண்மைத் தன்மை அறிய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே இளையராஜா, மிதுன் சக்கரவர்த்தி, ஜான்சன்குமார், ரகு, ராமு ஆகிய 5 பேரும் விஜயகுமாரிடம் 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

விஜயகுமார் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்டு சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரனிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மிதுன் சக்கரவர்த்தி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் லால்குடி சராக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட குமாரவேலுக்கும், இளையராஜா. ஜான்சன்குமார் ஆகியோருக்கும் போலி பட்டா, பத்திரம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை  செய்த போது பல தகவல்கள் வெளிவந்தன.

இந்த தகவலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கவனத்திற்கு லால்குடி சராக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் எடுத்துச் செல்கிறார். இதனை அடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், டி.எஸ்.பி-கள் அஜய்தங்கம் மற்றும் ஆல்பட் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில்…. 

கடந்த மாதம் 29ஆம் தேதி சமயபுரம் காவல் நிலையத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான சமயபுரம் கடைவீதி பகுதியில் உள்ள 8 கோடி மதிப்பிலான இரண்டு கடைகள் மற்றும் வீட்டை   ஜான்சன் குமார், இளையராஜா, தனபாக்கியம் ஆகிய மூன்று பேரும் தங்களது நிலத்தை போலி பட்டா பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்து உள்ளார்கள் என புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்த போது பல திடுத்திக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

நங்கவாரத்தைச் சேர்ந்த ஜான்சன் குமார், வி.துறையூரை சேர்ந்த இளையராஜா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாசன் எஸ்டேட் குரூப்பில் பணி புரிந்து வந்துள்ளனர். சமயபுரம் சுற்று வட்டார பகுதியில் காலி வீட்டு மனைகளை குறைந்த விலைக்கு வாங்கி வாசன் எஸ்டேட் குரூப்பில் அதிக விலைக்கு விற்று உள்ளனர். இது காலப்போக்கில் தெரியவர கடந்த 2014 ஆம் வருடம் இருவரையும் வாசன் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டாம் என விரட்டி உள்ளனர்.

இதனை அடுத்து இளையராஜா சமயபுரம் மாடக்குடி பஞ்சாயத்து தலைவராக ஆனால் வாசன் குரூப் தங்களிடம் தான் காலி வீட்டுமனைகளை வாங்க வந்தாக வேண்டும்  எண்ணியுள்ளார். இதனால் அப்போது மாடக்குடி தலைவராக இருந்த வழக்கறிஞர் சேகரை, ஜான்சன் குமார், இளையராஜா உள்ளிட்ட கூலிப்படையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்துள்ளனர். ஒரு வருடம் கழித்து தான் இளையராஜா, ஜான்சன்குமார் உள்ளிட்டவர்கள் மீது சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இளையராஜா, ஜான்சன்குமார், தனபாக்கியம், ரகு ஆகிய நான்கு பேரும் சமயபுரம் மேல ரத வீதியில் வசித்து வரும் நாராயண நாட்டாரின் 8 பிள்ளைகளுக்கு சொந்தமான 80 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு 28 ஏக்கர் விளைநிலம் ஆகியவற்றை தனபாக்கியம் பெயரில் போலி பத்திரம் தயாரித்து கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தைக் கொடுத்து பட்டா வாங்குகிறார்கள். 

அந்த பட்டாவை வைத்து தனபாக்கியம் பேரில் லால்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்து பின்னர் ஓரிரு நாட்களில் வி.துறையுரை சேர்ந்த இளையராஜா பெயருக்கு பெயர் மாற்றம் செய்த சில நாட்களிலே நங்கவாரத்தை சேர்ந்த ஜான்சன் குமார் என்பவருக்கு பெயர் மாற்றம் செய்து 30 ஏக்கரில் 18 ஏக்கரை 75 லட்சத்திற்கு ஈட்டுக்கடன் வைத்து ரொக்க பணத்தை வாங்குகிறார்கள்.

இதனிடையே நாராயண நாட்டாரின் மகன் சத்தியமூர்த்தி கடந்த 2015 ஆம் வருடம் லால்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என லால்குடி ஆர்டிஓ மற்றும் டிஆர்ஒ ஆகியோரிடம் மனு அளிக்கிறார். ஆனால் டிஆர்ஓ – ஆர்டிஓ கோவிந்தராஜு பணத்தைப் பெற்றுக் கொண்டு பெயர் மாற்றி பத்திரம் பதிவு செய்து விடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜான்சன்குமார், இளையராஜா தனபாக்கியத்தின் உதவியுடன் நாராயண நாட்டாரின் மேலரத வீதியில் உள்ள 8 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு கடை மற்றும் வீட்டை போலி பத்திரம் தயாரித்து கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தை கொடுத்து போலி பத்திரத்தின் படி அசல் பட்டா வாங்கி உள்ளனர். பட்டாவை வைத்து தனபாக்கியம் பெயரில் 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 28ம் தேதி மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனபாக்கியம் பெயரில் பத்திர பதிவு செய்கின்றனர். 

இந்த தகவல் நாராயண நாட்டாரின் மகன்களுக்கு தெரிய வர நாராயண நாட்டாரின் மகன் முருகேசன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இளையராஜா, ஜான்சன் குமார், ரகு. தனபாக்கியம் ஆகியோரை தேடி வந்த நிலையில் பாண்டிச்சேரி எல்லை அருகே தலைமுறைவாக இருந்த இளையராஜா, ரகுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியாக உள்ள ஜான்சன் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

நங்கவாரத்தை சேர்ந்த ஜான்சன்குமார் அவரது மனைவி ஆசிரியராகவும் ஒரு மகனும் உள்ளனர். இவர் ரியல் எஸ்டேட்டில் போலி பத்திரம் பதிவு செய்து லால்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 217 முறை பத்திரப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஜான்சன்குமார் திமுக கட்சியில் இருந்து கொண்டு அமைச்சர் நேருவுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். பத்திர பதிவு சார் பதிவாளர்கள் ஒவ்வொரு முறையும் பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

மேலும் இளையராஜாவும், ஜான்சன் குமாரும் சேர்ந்து தான் வாளாடி பகுதியில் வசிக்கும் குமரவேலுவிடம் போலி பட்டா, பத்திரம், அரசு முத்திரைகள் தயாரித்து தங்களுக்கு கொடுக்குமாறு தயார்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் ஜான்சன் குமார், இளையராஜா எத்தனை முறை பட்டா பத்திரம் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தெரிய வந்த இடத்தின் மதிப்பு மட்டும் 1000 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல போலி பத்திரங்களை தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருவதால் இது 500 கோடியை க்கு மேல் தாண்டும் என தெரிய வருகிறது. லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர்கள் பல லட்ச ரூபாய் பலமுறை லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *