‘வரியா’… பெண் காவலரை சைகை மூலம் அழைத்த இருவர் கைது!

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட கேளம்பாக்கம் காவல் சரக உதவி ஆணையராக இருந்து வருபவர் ரவிக்குமார். இவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை பார்த்து கொள்வதற்காக உதவி ஆணையர் ரவி சுழற்சி முறையில் காவலரை பணி அமர்த்து உள்ளார்.

அதே போல நேற்று உதவி ஆணையரின் தாயாரை பார்த்துக்கொள்ள கானாத்தூர் காவல் நிலைய பெண் காவலர் ஒருவரை அனுப்பி உள்ளார். பணியை முடித்த பின்னர் மாற்றுவதற்காக வரக்கூடிய காவலருக்காக பெண் மருத்துவமனை வெளியே நின்றிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பெண் காவலரிடம் “வரியா வரியா” என் ஆபாசமாக பேசி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்த பெண் காவலர் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.

பின்னர் மாற்றுவதற்காக காவலர் வந்துவிட்டதாக கூறியதால் மீண்டும் கீழே வந்த பெண் காவலரிடம் அதே நபர் ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் கோபமடைந்த பெண் காவலர் அந்த நபரிடம் இப்படிதான் எல்லாரையும் கூப்பிடுவியா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்த நபர் தனது நண்பர்களை வரவழைத்து காவலர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். பெண் காவலரிடம் ஆபாசமாக பேசி அழைத்த நபர் தரமணி களிக்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(29) என்பது தெரியவந்தது. இவர் மீது 354- வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல், 332- அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விக்னேஷ், அவரது நண்பர் குணசேகரன் ஆகிய 2 பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தாயாரை மருத்துவமனையில் பார்த்து கொள்வதற்காக காவலரை பணியமர்த்திய உதவி ஆணையர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *