1.5 டன் இனிப்புகளை என்ன செய்தார் ராஜேந்திர பாலாஜி

பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆவின் நிறுவனத்தில் நேற்று (5.7.2021) ஆய்வு செய்தார். நிறுவனத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் அமைச்சர் சந்தித்தார்.
அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 207 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டாலும் 1.50 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
மேலும், ஆவின் நிலையங்களில் ஆள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலாளர் தகுதியில் 174 பேரை நியமிப்பதில் ஊழல்கள் நடந்துள்ளதால் அதனை ரத்து செய்து புதிய ஆட்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு கடந்த தீபாவளியன்று 1500 கிலோ இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்காக எந்த பணமும் அவர் செலுத்தவில்லை.
பணம் வழங்காததற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதால் விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பணியின் போதே இறந்த ஆவின் நிறுவன ஊழியர்களின் வாரிசுகள் 48 பேருக்கு விரைவில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.