பப்ஜி மதனிடம் ஏமார்ந்தவர்கள் புகாரளிக்க வசதி

பிரபல யூ டியூப்பரான மதன், இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி எனப்படும் மொபைல் கேமை யூ டியூப்பில் விளையாண்டதுடன், சிறுவர் சிறுமிகளை ஆபாசமாகப் பேசியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, தலைமறைவான அவரை நேற்று(19.6.2021) காவல் துறையினர் தருமபுரியில் வைத்து கைது செய்தனர். அதற்கு முன்னதாக அவரது யூ டியூப் பக்கத்திற்கு அட்மினாக செயல்பட்டு வந்த அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரை சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடிய விடிய வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு மதன் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி மதன் கூகுள் பே மூலம் பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் மூலமும், அவரது யூ டியூப் பக்கம் மூலமாகவும் இதுவரை 4 கோடி ரூபாய், 4 சொகுசு கார்கள் மற்றும் பங்களா ஆகியவைகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், இது போன்று மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்க DCPCCB1@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

புகாரளிப்பவர்களின் பணம் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புகாரளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *