காவல்துறையிடம் சிக்கிய மதன்…காலில் விழுந்து கதறல்

‘யு டியூப்’ சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டுகளின் வாயிலாக, சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பி, சிறுவர், சிறுமிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
கோடிக் கணக்கான பணமும், ரசிகர்களும் இருப்பதால் எதிர்ப்பவர்களை குடும்பத்துடன் காணாமல் போக செய்து விடுவேன் என்றும், யூடியூபர் பப்ஜி மதன் மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது.இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புகாரில் சிக்கிய மதன் தலைமறைவானார். இதனால், அவரது மனைவி கிருத்திகாவையும் தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மதனின் யு டியூப் சேனலுக்கு கிருத்திகா தான் அட்மினாக செயல்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, தலைமறைவாக உள்ள மதனை கைது செய்ய காலவ்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். இன்று(18.6.2021) தருமபுரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையினர் கைது செய்யும் போது, நான் செய்தது தவறு தான் என்னை விட்டுவிடுங்கள் என காலில் விழுந்து கதறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காவல் துறையினர் கைது செய்து, அவரது செல்போன் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக, அவரது இரண்டு சொகுசு கார்களை காவல் துறையினர் கைப்பற்றினர். அவரது, மனைவி கிருத்திகா 8 மாதக் கைகுழந்தையுடன் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.