பழங்குடியின இளைஞரைத் துரத்தித் சென்று கொன்ற யானை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள செம்மனாரை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேர்,தாளமுக்கை பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்றிரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, சாலையோரத்தில் உள்ள புதிரில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று நான்கு பேரையும் துரத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நால்வரும் வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடியுள்ளனர்.

அதில் ராஜ்குமார் என்பவரை மட்டும் யானை துரத்திச் சென்று பிடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதனைப்பார்த்த மற்ற மூவரும் உதவிக்காக கிராமத்தினரை அழைக்கச் சென்றுள்ளனர்.

கிராமத்தினர் வந்து பார்த்த பொழுது ராஜ்குமார் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். உடனே, வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், “கோத்தகிரி வனச்சரகம்,குஞ்சப்பனை காவல் பகுதிக்குட்பட்ட செம்மனாரையில் வசிக்கும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 26 வயதான ராஜ்குமார் என்பவரை நேற்று இரவு காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார்.

விசாரனை மேற்கொண்டதில், கோயிக்குச் சென்று செம்மனாரையில் உள்ள வீட்டிற்கு திரும்புகையில், புதர் மறைவில் இருந்த யானை தாக்கியதை உறுதி செய்துள்ளோம். இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *