ரவுடியை தப்பவிட்ட பாஜக தலைவர்…இருவரையும் கைது செய்த போலீஸ்

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கான்பூரின் பிக்ரு கிராமத்தில், பிரபல குற்றவாளியான விகாஸ் துபேவை காவல் துறையினர் கைது செய்யச் சென்றனர். அப்போது அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி மற்றும் 3 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட எட்டு போலீஸார் பலியாகினர்.
நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதில் மனோஜ்சிங்கும் ஒருவர்.
தலைமறைவாகியிருந்த இவரின் தலைக்கு 25000 ரூபாய் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தெற்கு பகுதி மாவட்ட பாஜக தலைவராக இருந்த நாராயண்சிங் பிறந்தநாள் கொண்டாடினார். இதற்கு சுமார் 200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் கான்பூர் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் மனோஜ்சிங்கும் ஒருவர். இதனை அறிந்த காவல் துறையினர் மப்டியில் அவரைப் பிடிக்க காத்திருந்தனர்.
அதன்படியே மனோஜ்சிங்கும் பிறந்தநாள் விழாவிற்கு வர, மப்டியில் இருந்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அப்போது பாஜக தலைவரின் ஆதரவாளர்கள் அவரை கைது செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மனோஜ்சிங்கும் பாஜக தலைவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில் நொய்டாவில் நேற்று கைது செய்யப்பட்டனர்.