காதலன் உதவியோடு கணவனைக் கொன்று கிச்சனில் புதைத்த மனைவி!

மும்பையில் ஷாகிதா என்ற பெண் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று வீட்டிலுள்ள கிச்சனில் புதைத்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஷாயிக் என்பவருக்கு ஷாகிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 9 வருடங்கள் ஆகின்றன. மேலும், இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே 21-ஆம் தேதி வேலைக்குச் சென்ற ஷாயிக் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஷாகிதாவிற்கு
பக்கத்து வீட்டில் வசித்துவரும் அமித் விஷ்வகர்மா என்ற பாதுகாப்பு பணியாளருடன் தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இதனால் காவல்துறையின் சந்தேகம் ஷாகிதாவின் பக்கம் திரும்பியது. அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டபோது, ஷாகிதா தன் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்றதும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க உடலை வீட்டிலுள்ள கிச்சனில் புதைத்தும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, ஷாகிதா மற்றும் அவரது காதலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *