அறியாமையில் போதை ஆசாமிகள்! உயிரைக் குடித்த சானிடைசர்

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலைப் பரவலைத் தடுப்பதற்காக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. கடைகள் திறக்காததால் மதுப்பிரியர்கள் 15 நாட்களுக்கும் மேலாகத் திணறி வருகின்றனர்.
சிலர் மதுவுக்கு மாற்றாக போதை தரும் என மேற்கொள்ளும் செயல்கள் அவர்கள் உயிரையே பறித்து விடும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
திருச்செந்தூர் அருகேயுள்ள சன்னதி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மூர்த்தி(38), மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில், மதுபானம் கிடைக்காததால், சானிடைசரில் ஆல்கஹால் இருக்கும் அதைக் குடித்தால் போதை ஏறிவிடும் என விழிப்புணர்வு இல்லாமல் குடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே தம்பிக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவரது தம்பி வந்து பார்த்த போது, மூர்த்தி பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.
இதே போல் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சுந்தர்ராஜ்(45), டி.பி.ரோட்டில் உள்ள பழைய டாஸ்மார்க் கடை வாசலில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவரும் போதைக்காக சானிடைசரைக் குடித்து இறந்தது தெரிய வந்துள்ளது.