இதைக்கூடாவா திருடுவார்கள்…எல்லாம் ஊரடங்கின் எதிரொலி

தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வரும் ஞாயிற்றுக் கிழமை(30.5.2021) வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்ப்டுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மட்டும் நடமாடும் கடைகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் (24.5.2021) நள்ளிரவில் கடையின் பின்புற சுவரை துளைபோட்டு, உள்ளே 10 அட்டை பெட்டிகளில் இருந்த உயர் ரக மது பாட்டில்களைக் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீஸார் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, சுவரைத் துளையிட பயன்படுத்தி கடப்பாரை மற்றும் சுத்தியல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.