ரூ. 100 கூட இல்லேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு? இது என்னயா துரைமுருகனுக்கு வந்த சோதனை…

திமுக பொதுச் செயலாளர் சொகுசு பங்களாவில் திருட சென்று ஒன்றும் கிடைக்காத விரக்தியில் ”ரூ. 100 கூட வீட்டுல வைக்கலேன்னா… இவ்வளவு பெரிய பங்களா எதற்கு?” என்று எழுதி வைத்துவிட்டு திருடர்கள் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பொதுச் செயலாளராக இருப்பவர் துரைமுருகன். இவருக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மஞ்சகொல்லை பகுதியில் 25 ஏக்கர் அளவில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அந்த பகுதிக்கு வந்த திருடர்கள், பிரமாண்டமான சொகுசு பங்களாவைக் கண்டதும் இன்றைக்கு பெரிய வேட்டை இருக்கிறது என்ற ஆர்வத்தில் துரைமுருகனின் சொகுசு பங்களாவிற்கு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் உள்ளே வந்த திருடர்களுக்கு டீ குடிக்க கூட ஒன்றும் கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி ஹார்டு டிஸ்கை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் கஷ்டபட்டு திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில், ரூ. 100 கூட வீட்டுல வைக்கலேன்னா… இவ்வளவு பெரிய பங்களா எதற்கு? என்று சுவற்றிலும், “ஓரு ரூபாய் கூட இல்ல…” என்று அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்திலும் எழுதி சென்றுள்ளனர். கொள்ளை குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், திருடர்களின் கைரேகை உள்ளிட்டவைற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து மற்ற பங்களாக்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று காரில் 10 பேர் வந்து சென்றுள்ளது பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியின் தலைவரின் வீட்டிலேயே திருட்டில் ஈடுபட்டுள்ளதால் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.