மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்… திமுக விசுவாசி எடுத்த விபரீத முடிவு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் எனக்கூறி தி.மு.க தொண்டர் ஒருவர் தனது விரலையே வெட்டியுள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் குருவைய்யா. கூலி வேலை செய்து வருகிறார். இளம் வயது முதல் திமுகவின் தீவீர தொண்டராக இருந்து வந்துள்ளார்.
கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் தி.மு.க தோல்வி அடைந்ததால் விரக்தியில் இருந்துள்ளார் குருவையா. இதனால் தி.மு.க வெற்றி பெற வேண்டியும், ஸ்டாலின் முதல்வராக வர வேண்டியும் அடிக்கடி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு மாரியம்மனை தரிசனம் செய்த அவர், திடீரென தனது கை விரலை துண்டித்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.