மருத்துவர் வேடத்தில் திருடன்… பணம் பறிக்க முயன்றவனை அடித்து பிடித்த பொதுமக்கள்!

மருத்துவர் போல நடித்து நோயாளியிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இரு சக்கர வாகனத்தில் வருகைதந்த இளைஞன், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் நீல நிற உடையை அணிந்துகொண்டு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்து வந்துள்ளான்.
மருத்துவர்களை போலவே கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வந்துள்ளான். மேலும், இரண்டு நாட்களாக மருத்துவமனை கேண்டினில் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி உணவு சாப்பிட்டு வந்த நிலையில், இன்று காலை தன்னை மருத்துவர் என்று கூறி அறிமுகம் செய்து, நோயாளிகளை மிரட்டி பணம் தருமாறு கேட்டுள்ளான்.
பணம் தர மறுத்த நோயாளிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி திட்டிய நிலையில், இவனது பேச்சு வழக்கு மற்றும் உடல்மொழி, காதில் கடுக்கன் அணிந்து இருந்ததை கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள், அவனை பிடித்து விசாரணை செய்துள்ளனர். காவல் நிலையத்திற்கும் இதுதொடர்பான தகவலை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியை சார்ந்த சாரங்கன் என்பதும், சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் போன்ற பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
கோவையில் தற்போது தங்கியுள்ள சாரங்கன், சிவானந்தா காலனியில் உள்ள திருநங்கைகளுடன் தங்கியிருந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், மருத்துவர் வேடத்தில் மருத்துவமனைக்கு வந்து பணம் பறிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.