காரில் கயிறுகட்டி திருடப்பட்ட ஏடிஎம் எந்திரத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுப்பு!

திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் கிராமத்தில் காரில் கயிறுகட்டி திருடப்பட்ட ஏடிஎம் எந்திரத்தின் உதிரி பாகங்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை ஒரு கும்பல் காரில் கயிறு கட்டி திருடிச் சென்றது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கொள்ளை கும்பல் பயன்படுத்திய டாடா சுமோ ஒரு திருட்டு வாகனம் ஆகும். ஈங்கூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது காரைத் திருடிய கும்பல்,அதனைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தைக் கடத்தி கொள்ளையடித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் எந்திரத்தை எடுத்துச் சென்ற கார் பெருந்துறை விஜயமங்கலம்அருகே கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸார் ஆய்வு நடத்திய போது சரளை என்ற இடத்தில், உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை போலீஸார் கண்டு பிடித்தனர். காலி நிலத்தில் உடைக்கப்பட்டு, சிதறி கிடந்த ஏடிஎம் இயந்திர பாகங்களை மீட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் எந்திரத்தை கட்டி இழுத்து வந்து ஆளில்லாத இந்த இடத்தில் வைத்து உடைத்து பணத்தை திருடிவிட்டு வேறு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அந்த எந்திரத்தில் வெறும் ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே இருந்ததாக வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் உதவியுடன் அவர்கள் தப்பிச்சென்ற வாகனம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
