பணத்தை திருப்பிக் கேட்ட நண்பருக்கு கத்திக்குத்து… இளைஞர் தலைமறைவு!
கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட நண்பரை, கத்தியால் குத்திய இளைஞரை, வேப்பனஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சசி, 21. இவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.
இவரும், கர்நாடகா மாநிலம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த கார்பென்டர் நூர்பாய் 34, என்பவரும் நண்பர்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நூர்பாய் சசியிடம், 500 ரூபாய் கடனாக பெற்றுள்ளார். உடனடியாக கொடுப்பதாக கூறிச்சென்ற நூர்பாய், பணத்தை கொடுக்கவில்லை.
நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கோவில் அருகில், நூர்பாய் செல்வதை பார்த்து அவரை தடுத்து நிறுத்தி, தான் கொடுத்த பணத்தை திருப்பித் தர கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நூர்பாய், சசியை கையால் அடித்ததுடன், தான் வைத்திருந்த கத்தியால் சசியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, வேப்பனஹள்ளி போலீஸ் எஸ்.ஐ., சந்துரு வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நூர்பாயை தேடி வருகின்றார்.