“அரசியல்+கிரிக்கெட்”அமைச்சர் டிஆர்பி ராஜா போட்ட ட்வீட்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

“ஒரு நல்ல தலைவன் இருந்தால், எந்த ஒரு எதிரியையும், அவர்கள் குஜராத்தாக இருந்தாலும் வெல்ல முடியும், கடந்த காலங்களிலும் நாம் பலமுறை குஜராத்தை தோற்கடித்துள்ளோம்” என அரசியல் + ஐபிஎல் கிரிக்கெட்டை கனெக்ட் செய்து ட்வீட் தட்டியுள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. மழையால் ஆட்டம் தடைபட்டு போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற சூழல் ஏற்பட்டு ஒருவழியாக, நேற்று ஆட்டம் தொடங்கி முதல் இன்னிங்ஸ் முடிந்து, மீண்டும் சென்னை அணி ஆடத் தொடங்கியதும் மழை மீண்டும் விளையாடியது.பின்னர், மழை நின்ற பிறகு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி சென்னை அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 14 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 158 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க, கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த இரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா, முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது கோப்பையைக் கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொழில் துறை அமைச்சரான டிஆர்பி ராஜா, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஜப்பான் சென்றிருக்கும் நிலையில், அவரும் சிஎஸ்கே – குஜராத் த்ரில் ஃபைனலை பார்த்து, சிஎஸ்கேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குஜராத் அணி உடனான வெற்றியை – அரசியலுடன் தொடர்பு படுத்தி ட்வீட் செய்துள்ளார் டிஆர்பி ராஜா.தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பதிவில், “மஞ்சள் படையினரின் இந்த வரலாற்று வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தல தோனி தலைமையில் ஒவ்வொரு சிஎஸ்கே வீரரும் இந்த மகத்தான வெற்றிக்குப் பங்களித்துள்ளனர். கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு தலைவன் இருக்க மாட்டார். அவர் தனது அணியினரையும், ரசிகர்களையும் ஊக்கப்படுத்தினார்.

ஆம், அவரது தலைமையின் கீழ் ஒவ்வொரு பிளேயரும் அவர்களின் உண்மையான ஃபார்மை கண்டடைகிறார்கள். ஆம், ஒரு தலைவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தவர். ஆம், எக்காலத்திற்கும் சிறந்தவர் தோனி. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களைப் போலவே தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினும் மகிழ்ச்சியடைந்தார்.உண்மையான தலைவரின் கீழ் இருக்கும் ஒரு அணி, எந்த எதிரியையும் வெல்ல முடியும் என்று விளையாட்டை விரும்புபவர்கள் அனைவரும் நம்பினர். அவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டாலும் குஜராத் தோற்கடிக்கப்படும். கடந்த காலங்களில் பல குஜராத்துகளை நாங்கள் தோற்கடித்துள்ளோம். ஒரு அணியாக எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகிற்குக் காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையை எப்போதும் நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, தானும் தோனி ரசிகர் தான் என பலமுறை கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அணியின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு திட்டத்துடன் இருக்கும் தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி தனது 5வது கோப்பையை வென்றுள்ளது. அதற்கு சென்னை அணியை வாழ்த்துகிறேன். தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்த போதும் சென்னை அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்த ஜடேஜாவுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *