மைதானத்தில் தகராறு | விராட் கோலி, கவுதம் கம்பீருக்கு 100 சதவீத அபராதம் 

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி மற்றும் எல்எஸ்ஜி ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கை கொடுத்துக் கொண்ட போது ஆர்சிபி வீரர் கோலி மற்றும் எல்எஸ்ஜி அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு அணிகளை சேர்ந்த மற்ற வீரர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.

முன்னதாக போட்டியின்போது, லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக், பேட் செய்த போது கோலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவே கம்பீர் – கோலி இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்கிற்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டியின் போது, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளத’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *