சட்டசபைக்கு கருப்பு புடவையில் வந்த வானதிசீனிவாசன்-காங்கிரசுக்கு சப்போர்ட்டா?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கருப்பு உடையில் வந்தார் .காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது

இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக இந்த போராட்டம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று கருப்பு உடை அணிந்தபடி அவைக்கு வந்தனர். இரவிலும் சட்டசபையிலும் போராட்டம் செய்வோம் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அறிவித்து உள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் இருளான காலத்தில் நாம் இருக்கிறோம். ராகுலை தகுதி நீக்கம் செய்தது தவறு. அதை தேசிய அளவில் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் சட்டசபையில் திடீரென வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருப்பு உடை அணிந்து வந்தது பெரிய சர்ச்சையானது. கருப்பு புடவையில் அவர் வந்து இருந்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வந்த நிலையில் அவர்களுடன் வானதி சீனிவாசனும் கருப்பு உடையில் வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன இவர் ராகுல் காந்திக்கு சப்போர்ட்டா என்ற விவாதம் திடீரென சட்டசபையில் எழுந்தது. ஆனால் வானதி சீனிவாசன் சிரித்தபடியே அவைக்கு வந்தார்.இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வருவார்கள் என்பதை வானதி எதிர்பார்க்கவில்லை. அவருக்கு இந்த விஷயமே தெரியாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வருவது அறியாமல் வானதியும் கருப்பு புடவையில் வந்தார். ஆனால் அவர் சிரித்தபடி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேசிவிட்டு சென்றார். அரசியல் ரீதியாக இரண்டு தரப்பிற்கும் கடும் மோதல் இருந்தாலும் கூட இன்று நடந்த இந்த சம்பவம் அங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *