இந்திய வீரருக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்!

கடந்த அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமையன்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாக விளையாடிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற வரலாறு முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் அணியுடனான இந்தத் தோல்வி இந்திய ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்திய வீரர்கள் பலரும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர். அதிலும் குறிப்பாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீதான ஆன்லைன் தாக்குதல்களும், வசைபாடுதல்களும் அதிகமாயின. இந்திய அணியில் ஆடும் லெவனில் இருக்கும் ஒரே முஸ்லீம் வீரர் முகமது ஷமி மட்டுமே ஆவார். முகமது ஷமி ஒரு துரோகி எனவும், அவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்திய வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக சச்சின்,சேவாக்,பதான் போன்ற இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கேப்டன் விராட் கோலியும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள், அதற்கான ஒருவரை மட்டும் குறைகூறுவது சரியல்ல என முகமது ஷமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும், இந்தியாவிற்காக பல்வேறு தருணங்களில் சிறப்பாக பந்து வீசி பல ஆட்டங்களை வென்று கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முகமது ஷமிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் பேசியுள்ளார். அதில், முகமது ஷமி ஒரு சிறந்த வீரர் எனவும், அவருடைய பந்து வீச்சு சிறப்பாக உள்ளதாகவும் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். அதனால், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என ரிஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.