இரண்டு பேர் .. இரண்டே பேர் .. முடிஞ்சது மொத்த ஆட்டம் : 60 ரன்னில் சுருண்ட ஸ்காட்லாந்து

நேற்று நடைப்பெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணியினை 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி . இந்த வெற்றி தான் டி20 வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
டி20 உலகக்கோப்பை போட்டியின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்று சூப்பர் -12 சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது .நேற்று நடைப்பெற்ற போட்டியில் குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின . முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நஜீபுலா (59 ) , குர்பஸ் (46 ) , ஹசரதுல்லா (44) ஆகியோரின் பங்களிப்பால் இமாலாய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது .191 ரன்கள் சேர்த்தால் வெற்றி என களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து.

உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்தவர்களாகக் கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கான் இருவரும்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.முஜிப் உர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .ரஷித் கான்2.2 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்த இரு பந்துவீச்சாளர்களும் சேர்ந்து ஸ்காட்லாந்து அணியின் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்டத்தை மாற்றிய ஒரு ஓவர் :
தகுதிச்சுற்றுப்போட்டிகளில் மூன்று போட்டிகளிலும் வென்றும் சூப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்த அணி ஸ்காட்லாந்து .அதனால் , வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கிரிக்கெட் ரசிகர்கள் கருதினர் .அதற்கேற்ப , 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர் .3 ஓவர்களில் 27 ரன்கள் குவித்தனர் . நான்காவது ஓவரினை வீச வந்த முஜிப் உர் ரஹ்மான் , அந்த ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணியை நிலைகுலைய வைத்தார் .அதிலிருந்து இறுதி வரை அந்த அணியால் மீள முடியாமல் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான தோல்வியினை தழுவியது .

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டில் 6.500 பெற்று குரூப்-பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த ரன் -ரேட் நிச்சயம் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு அணிகளுக்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கும் .