தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
முன்னதாக 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. அதில் இரண்டில் இந்தியாவும், ஒன்று இலங்கையும் வெற்றி பெற்றிருந்தன. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையிலான டி20 போட்டிகளில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை வசம் ஆக்கினார்.
இந்நிலையில், இன்று 2-வது டி20 போட்டி கொழும்புவில் இரவு எட்டு மணிக்கு தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று டி20 தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
மறுபுறம், ஒருநாள் தொடரை இழந்த நிலையில் தற்போது நடைபெறும் டி20 தொடரையும் இழந்துவிடக்கூடாது என்ற கட்டாயத்தில் இலங்கை அணி இன்று களம் காண்கிறது.
தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கையும் இருப்பதால் இன்றைய போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.