நாளை தொடங்குகிறது டிஎன்பிஎல்!

நாளை முதல் டிஎன்பிஎல் (TNPL) சீசன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. கொரோனா பரவலின் காரணத்தால் போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் எனப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.
நடப்புச் சாம்பியனான சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி இந்தாண்டும் வலுவாகவே இருக்கிறது. இரண்டாவது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் அஸ்வின் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் போட்டியை எதிா்கொள்கிறது. நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை பேந்தா்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளனா்.
சேப்பாக் கில்லிஸ் அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.