இலங்கைக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் இளம் புயல்கள்!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்திலேயே இருக்கும்படி சூழ்நிலை அமைந்து விட்டது.
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலரும் இங்கிலாந்தில் உள்ளனர். இந்த நிலையில், ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இலங்கையுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. சீனியர் வீரர்கள் பலரும் இங்கிலாந்தில் உள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு அவர்களது திறமையை வெளிப்படுத்த இந்த இலங்கை தொடர் ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இலங்கை செல்லும் இந்திய அணியில் பல இளம் வீரர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அதிலும், குறிப்பாக ஐந்து இளம் புயல்கள் களமிறங்க உள்ளன.
பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா மற்றும் இஷான் கிசான் போன்ற இளம் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இலங்கைக்கு எதிராக களமிறங்க உள்ளனர். இவர்களின் திறமையை ஐபிஎல் போட்டிகள் இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டின. இவர்களில் ஒரு சிலர் இந்திய அணிக்காக விளையாடிய போதிலும் இலங்கைக்கு எதிரான இந்தத் தொடர் இவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் மேலும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. ராகுல் டிராவிட் அவர்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது தான் அது. ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு பல சிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமை ராகுல் டிராவிட்டுக்கு சேரும்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தொடருக்கு சிறப்பு கூட்டியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கைக்கு எதிரான இந்த போட்டி வருகிற ஜூலை 18 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.