கிரிக்கெட் மட்டையும் பக்கத்து வீட்டு மனைவியும்… மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான தினேத் கார்த்திக் தற்போது, கிரிக்கெட் வர்ணனையாளராகப் அவதாரம் எடுத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆங்கில தொலைக்காட்சியின் வர்ணனையாளராக பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதிய 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்றினார்.
அப்போது, கிரிக்கெட் பேட் தொடர்பாக சக வர்ணனையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, தினேஷ், “பேட்ஸ்மேன்களுக்கு தனது பேட் மீது எப்போதும் நிறைவு வராது.
நம் மனைவியை விட பக்கத்து வீட்டு மனைவி பிடிப்பது போல, நம் பேட்டை விட அடுத்தவர் பேட் தான் பிடிக்கும்” எனப் பேசியிருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகப் பணியாற்றினார்.
அப்போது, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் உள் நோக்கத்துடன் எதுவும் கூறவில்லை எனவும் கூறி அந்த சர்ச்சையை முடித்து வைத்துள்ளார்.