’சிங்’காக மாறிய கிறிஸ் கெய்ல்!

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துக் கொண்டிருந்த போதும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் 14 ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற்றது.
ஆனால், தொடரில் பங்கேற்றிருந்த பல வீரர்களுக்குக் கொரோனா பாதிப்பு உறுதியானதால் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்தியாவில் தங்கியிருந்த வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக வீரர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பு மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைக்காலம் முடிந்ததும் அவர்கள் சொந்த நாடுகளுக்குச் சென்றனர்.
ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல் தன் நாட்டுக்குச் செல்லாமல் மாலத்தீவிலேயே விடுமுறையைக் கழித்து வருகிறார்.
மாலத்தீவில் தான் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் கெய்ல், தற்போது டர்பன் அணிந்து சிங் போல் தோற்றமளிக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அதில் பஞ்சாபி டாடி என்ற ஆல்பம் பாடலின் படப்பிடிப்பிற்காக ஆர்வமாகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.